புதைந்து கிடந்த ஒரு வரலாற்று உண்மையை சொல்லும் படம்.
பல்லவ மன்னனின் மூன்றாவது இளவரசர் போதி தர்மர். இவர், 1600 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் இருந்து சீனாவுக்கு மருத்துவம் மற்றும் தற்காப்பு கலையை பரப்புவதற்கு செல்வதாக கதை ஆரம்பிக்கிறது. சீனாவுக்கு செல்லும் போதி தர்மரை அங்குள்ள மக்கள் முதலில் தீய சக்தியாக கருதி எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனால் வினோத நோயில் இருந்து போதி தர்மர் தனது மருத்துவத்தால் அவர்களை காப்பாற்றியதும் அவர் மீது அவர்களுக்கு பூரண நம்பிக்கை ஏற்படுகிறது. அதோடு அவரிடத்தில், எதிரிகளிடம் இருந்து தங்களை காத்துக்கொள்ள களறி கலையையும் சீனர்கள் பயின்று கொள்கின்றனர். அதன்பிறகு தாய் நாடு செல்ல விரும்பும் போதி தர்மரை அனுப்ப அவர்களுக்கு விருப்பமில்லை. மாறாக, அவரது உடம்பை தங்கள் மண்ணிலேயே புதைத்தால் அந்த பலன் தங்களுக்கே கிடைக்கும் என்று நினைக்கின்றனர். இதனால் அவர்கள் தனக்கு தருவது விஷம் என்பது தெரிந்தும் இன்முகத்தோடு அதை வாங்கிக்குடித்து உயிரை விடுகிறார் போதி தர்மர். இதனால் அந்த நாட்டிலேயே அடக்கம் செய்யப்படும் போதி தர்மர் அவர்களால் வணங்கப்படும் தெய்வமாகிறார். இப்போதும் சீனர்கள் அவரை வழிபட்டு வருகிறார்கள் என்ற வரலாற்றை சொல்லி படத்தை தொடங்கியிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.
அதைத்தொடர்ந்து 1600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த போதி தர்மரின் டிஎன்ஏ பரிசோதனையை ஸ்ருதிஹாசன் நடத்தி வருவது போன்று படம் வேறு களத்தில் செல்கிறது. அவரது டிஎன்ஏ இருப்பவரை கண்டுபிடித்து மீண்டும் அந்த திறமையை வெளிக்கொண்டு வரலாம் என்பது அவரது ஆராய்ச்சியின் நோக்கமாக இருக்கிறது. அப்படி அந்த வம்சாவழியினர் பலரை டிஎன்ஏ செய்து பார்த்ததில் மறைந்த போதி தர்மரின் டிஎன்ஏ இப்போது அவரது வம்சத்தை சேர்ந்தவரான சூர்யாவுக்கு பொருந்துவதை ஸ்ருதி கண்டுபிடிக்கிறார்.
ஆனால் அவர்களது முதல் சந்திப்பிலேயே சூர்யா, ஸ்ருதிஹாசனை காதலிக்கிறார். ஸ்ருதி அப்போதைக்கு காதலிக்கவில்லை என்றாலும் தனது ஆராய்ச்சிக்காக காதலிப்பது போல் நடந்து கொள்கிறார். ஒரு கட்டத்தில் ஸ்ருதி தன்னை டிஎன்ஏ விசயமாக தேடி வந்திருப்பது சூர்யாவுக்கு தெரிந்து அதிர்ச்சியடைகிறார். ஆனால் அவரிடம் பக்குவமாக சொல்லி புரிய வைக்கிறார் ஸ்ருதி. இந்த நிலையில், ஸ்ருதியின் ஆராய்ச்சி பற்றி தமிழ்நாட்டிலுள்ள ஒரு புரபசர், சீனர்களுக்கு தகவல் கொடுக்கிறார். இதற்காக பெரிய அளவில் லஞ்சமும் பெறுகிறார்.
இதன்காரணமாக, மீண்டும் இந்தியாவில் இன்னொரு போதி தர்மர் வந்து விடக்கூடாது என்று நினைக்கும் சீனர்கள், அந்த போதி தர்மரின் வம்சத்தை சார்ந்தவரை அழிக்க இந்தியாவுக்கு ஒருவனை அனுப்புகிறது. அதோடு, சீனாவில் பரவிய வினோத நோயை இந்தியாவிலும் பரப்பி விட்டு இந்தியாவை நிலைகுலைய செய்ய வேண்டும் என்றும் நினைக்கும் சீனர்கள், அதன்பிறகு அதற்கான மருந்தை தாங்கள் தருவதாக சொல்லி இந்தியாவை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்கலாம் என்ற நோக்கத்திலும் அந்த நபரை அனுப்பி வைக்கின்றனர்.
இதையடுத்து என்ன நடக்கிறது என்பதே விறுவிறுப்பான இறுதிக்காட்சி.
2001-ம் ஆண்டு 'தீனா' படத்தில் இருந்து வித்தியாசமாக கதை சொல்லி வரும் ஏ.ஆர்.முருகதாஸ் '7-ஆம் அறிவு' படத்தில் தமிழன் தலைநிமிர வேண்டும். அதற்கு தன் பாரம்பரிய சிறப்பை உணர வேண்டும் என்ற கருத்தை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்துள்ளார். படத்தில் பல இடங்களில் மசாலாத்தனம் இருந்தாலும் தமிழன் தோற்கக் கூடாது என்ற வரிகள், ஈட்டிகளாக பாய்கின்றன.
இலங்கையில் தமிழன் தோற்றதற்கு காரணம், துரோகமும் மற்றும் சில நாடுகளின் சதியும்தான் என்ற வரிகளை சூர்யா உணர்ச்சிப் பிழம்பாக சொல்லும்போது, தியேட்டரில் கைதட்டல் காதை நிரப்புகிறது. தமிழர்களிடம் உணர்வு மங்கி விடவில்லை என்பதை இது காட்டுகிறது. உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் தமிழ் வரலாற்றுடன் அறிவியல் புனைவும் கலந்த பிரம்மாண்டமாக '7-ஆம் அறிவு' உள்ளது.
விஷம் கலந்த உணவு என்று தெரிந்தும், தன் உடல் அங்கு அடக்கம் செய்யப்பட்டால் அங்கு எந்த தீங்கும் நேரிடாது என்று அங்குள்ளவர்கள் நம்புகிறார்கள் என்பதற்காக அந்த உணவினைச் சாப்பிட்டு சமாதியாகிப் போகும் போதி தர்மனின் தியாகம் மெய்சிலிர்க்க வைக்கிறது. பொது நலத்திற்காக சமாதியானவர்கள் சாமி ஆகிவிடுகிறார்கள். போதி தர்மனும் சீனா முழுமைக்கும் சாமி ஆகிவிடுகிறார். போதி தர்மனின் சிலை முன் வணக்கம் செலுத்தும் சீனாக்காரனைப் பார்க்கும் போது நமக்கு நிச்சயமாக கர்வம் தலைகேறுகிறது. தடுக்கி விழுந்தால் அவ்வளவு சிலைகள், அட! இங்கே சிலைகளில் தானே நாம் தடுக்கி விழவே வேண்டியிருக்கிறது. அந்த அளவுக்கு பார்க்கும் இடமெல்லாம் யார் யாருக்கெல்லாமோ சிலை இருக்கும் தமிழகத்தில் போதி தர்மனுக்கு ஒரு சிலை கூட கிடையாது!!!
பள்ளி மாணவர்களுக்குத் தேவையில்லாத பாடத்திட்டங்களைச் சேர்த்து அடுத்து வரும் அரசாங்கத்தால் அதனை ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட வேண்டிய அளவிற்குப் பாடத்திட்டங்கள் தயாரிப்பவர்கள் போதி தர்மனை மறந்தது ஏனோ..? நம் நாட்டில் முதலில் மனிதக் காக்கைகள் ஒழிய வேண்டும் அல்லது ஒழிக்கப்பட வேண்டும்.
திரையில் சூர்யா, ஸ்ருதிஹாசன், வில்லன் நடிகர் ஜானி ட்ரையென் மூவரும்தான் நிறைந்துள்ளனர். சூர்யா இப்படத்தில் போதி தர்மர், சர்க்கஸ் கலைஞர், டி.என்.ஏ. மூலக்கூறு மாற்றம் செய்யப்பட்ட இளைஞன் என மூன்றுவிதமாக வருகிறார். முதல் 30 நிமிடங்கள் போதி தர்மராக அவர் வரும் காட்சிகளில் இமைகளை மூட முடியாதபடி செய்து விட்டார். சிக்ஸ் பேக் உடலமைப்பை முறுக்கி காட்டும் காட்சிகளில் பிரமிப்பூட்டுகிறார். ஸ்ருதியை காதலிக்கும் காட்சிகளிலும், சண்டை காட்சிகளிலும் சூர்யா நடிப்பு அருமை.
ஸ்ருதி ஹாசனுக்கு இது முதல் படம் என்பதை நம்ப முடியவில்லை. அழகு, சிரிப்பு, ஆவேசம், அழுகை, ஆர்ப்பாட்டம் என்று அத்தனை அம்சங்களையும் அவர் இந்த படத்தில் கொட்டியுள்ளார். தமிழை அவமதித்தால் மூஞ்ச பேத்துடுவேன், உன் காதலைத் தூக்கி குப்பையில் போடு போன்ற காட்சிகளில் ஆவேசமான நடிப்பு, அவரது சொந்த குரல் வசனம் உயிரோட்டமாக உள்ளது. பல காட்சிகளில் கமலஹாசனின் வாரிசு என்பதை ஸ்ருதி நிரூபித்துள்ளார்.
வில்லன் டாங்லீயாக வரும் ஜானி ட்ரைங்யென் வியட்நாம் நாட்டைச் சேர்ந்தவர். அவரது குடும்பமே கலைக் குடும்பமாகும். 37 வயதாகும் இவர் 'ஸ்பைடர்மேன்' படத்தில் கிரீன்காப்லின் கதாபாத்திரத்துக்கு டூப்பாக நடித்துள்ளார். சூர்யாவுக்கு இணையாக இவர் இப்படத்தில் செம கலக்கு கலக்கியுள்ளார். பிறரது மனதை கட்டுப்படுத்த இவர் காட்டும் முகபாவனைகள் மனதை விட்டு அகலாதவை.
சூர்யா, ஸ்ருதி இருவரையும் விரட்டும் காட்சிகள் படத்துக்கு சூடேற்றுகின்றன. வித்தியாசமான இந்த வியட்நாம் வில்லன் தமிழர்கள் நெஞ்சில் இடம் பிடிப்பார். இவர் வரும் காட்சிகளில் ஹாரிஸ் ஜெயராஜ் அமைத்துள்ள இசை, ரசிகர்களை இருக்கையில் உட்கார விடாமல் செய்கிறது. படத்தில் ஆறு பாடல்கள் உள்ளன. பா.விஜய், நா.முத்துக்குமார், கபிலன், மதன்கார்க்கி எழுதி உள்ளனர்.
'ஓ ரிங்கா ரிங்கா' பாடலுக்கு ஆயிரம் நடனக் கலைஞர்கள் ஆடியுள்ளனர். 'ஏ லே லமா' பாடலை விஜய்பிரகாஷ், கார்த்திக், ஷாலினியுடன் ஸ்ருதியும் பாடியுள்ளார். 'யம்மா யம்மா' என்ற காதல் தோல்வி பாட்டு, படத்தின் வேகத்துக்கு கடிவாளம் போடுவது போல உள்ளது.
ரவி கே.சந்திரனின் ஒளிப்பதிவு படத்துக்கு முதுகெலும்பாக இருக்கிறது. சீன அழகை நம் கண்களுக்கு விருந்தாக்கி உள்ளார். பீட்டர் ஹெய்னின் சண்டை காட்சிகள் புதுவிதமாக மிரட்டியுள்ளன. சூர்யா, ஸ்ருதி இருவரையும் கொல்ல, வில்லன் டாங்லீ மற்றவர்களின் மனதைத் தூண்டி விட்டு நடத்தும் பத்து நிமிட சண்டை பரரப்பாக படமாக்கப்பட்டுள்ளது.
ரசிகர்களுக்கு ஆர்வம் கொடுக்கக்கூடிய அத்தனை விஷயங்களையும் இந்த படத்திற்காக முருகதாஸ் திரட்டியிருக்கிறார். அதை அப்படியே ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றும் நினைத்திருக்கிறார். அதனால்தான் சில காட்சிகள் டாக்குமெண்டரி படம் போல அமைந்திருக்கிறது. போதி தர்மன் எபிசோட்டில் இருந்த விறுவிறுப்பு சூர்யா-ஸ்ருதி காதல் காட்சிகளில் இல்லாமல் போனது படத்திற்கு மைனஸ். அதே போல வில்லன் ஜானி சூர்யாவை கொலை செய்யும் காட்சிகளில் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம்.
சாதாரண பெண், துப்புரவு தொழிலாளி எல்லாம் குங்பூ சண்டை போடுவது வித்தியாசம். சுமார் ஐம்பது வாகனங்களை தூள், தூளாக நொறுக்கி எடுக்கப்பட்ட இந்த சண்டை காட்சிக்கு மட்டும் பத்து கோடி ரூபாயை செலவு செய்துள்ளார்களாம். இறுதியில் சீனாக்காரனை அழித்து விட்டு சூர்யா, தமிழர்கள் தங்கள் பாரம்பரிய சிறப்பை மறக்கக் கூடாது, என்று பேசும் வசனம் 'நச்' என உள்ளது.
வீரமாக வாழ்ந்த தமிழ் இனம் இதை புரிந்து கொண்டால் நல்லது. இலங்கையிலும், மாலத்தீவிலும் சீனா கால்பதித்து, நம்மை முற்றுகையிட்டுள்ள நிலையில், எதிர்கால தமிழன் எப்படி வாழ வேண்டும் என்ற பாடத்தை '7ஆம் அறிவு' சொல்லியுள்ளது.
7ஆம் அறிவு - தமிழனின் மிடுக்கான வரலாற்றுப் பதிவு!
Comments
Post a Comment